Sunday, December 28, 2008

மாயாவியும் மந்திரவாதியும் & காப்பி அடிக்கும் காமிக்ஸ்'ம்

Vasu Comics MM Cover

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். என்னுடைய முதல் பதிவில் இருந்த உண்மைகளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் வாசக அன்பர்கள் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற காமிக்ஸ்'களின் முகமூடியை கிழிக்குமாறு கேட்டு கொண்டனர். அதன் விளைவே இந்த பதிவு. என்னுடைய முதல் பதிவில் பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

நிற்க.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள் நடிப்பில் வெளிவந்த "மன்னன்" என்ற திரைப் படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கும். அந்த படத்தை தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் "காரானா மொகுடு" என்ற பெயரில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தில் நக்மா மற்றும் வாணி என்ற இரண்டு குடும்ப குத்து விளக்குகளின் "திறமை" முழுவதுமாக வெளிப் பட்டது. அதனால் அந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அர்ஜுன்" என்ற பெயரில் வெளிவந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழன் நக்மாவில் திறமையில் மயங்கி இந்த படத்தையும் வெற்றி பெற வைத்தான். அதாவது, தமிழில் வெளிவந்த ஒரு படத்தின் தமிழாக்கத்தையும் நாம் வெற்றி பெற வைப்போம்.

தொடர்க.

சென்ற பதிவில் நான் குறிப்பிட்டதை போலவே நமது தமிழ் நாட்டு சித்திர கதைகளை மைய்யமாக கொண்டே பல காமிக்ஸ் கதைகள் வெளிவந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது நான் கூறப் போகும் செய்தியால் நெடுநாள் முத்து காமிக்ஸ் ரசிகர்களாகிய முத்து விசிறி, காமிக்ஸ் டாக்டர், கிங் விஸ்வா போன்றவர்கள் அதிர்ச்சி அடையலாம்.

ஆனாலும் உண்மை என்பதை அவர்களும் அறிந்து கொள்ளட்டும். முத்து காமிக்ஸ்'இல் வந்த பெய்ருட்டில் ஜானி என்ற கதையை உங்களில் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் அந்த கதையின் ஆதாரம் என்ன? என்று எப்போதாவது நீங்கள் யோசித்து உண்டா? அந்த கதையின் ஆதாரமே இந்த பதிவில் நான் இடப் போகும் வாசு காமிக்ஸ் என்ற தமிழக சித்திரக்கதை பொக்கிஷமே என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

இதை தவிர முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய (மிகவும் புகழ் பெற்ற ஓர் இரவு, வேலைக்காரி) போன்ற கதைகளின் முன்னோடி என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் மேலே குறிப்பிட்ட வாசு காமிக்ஸ் அவ்வளவு சிறப்பான வரலாறு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் இதழின் கதைகளை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவந்த ப்ளீட்வே என்ற நிறுவனம் காப்பி அடித்தது. அதன் கதைகளை சிவகாசியில் இருந்து வெளிவந்த முத்து காமிக்ஸ் தமிழில் மொழி பெயர்த்து வெளி இட்டது.

அதாவது, தமிழில் வெளிவந்த "மாயாவியும் மந்திரவாதியும்" என்ற கதையை இங்கிலாந்து ப்ளீட்வே நிறுவனம் ஆங்கிலத்தில் வெளி இட, அதனை தான் முத்து காமிக்ஸ் மொழி பெயர்த்து வெளிஇட்டது. ஆங்கிலேய மோகம் பிடித்து அலையும் நாம் "ஆஹா, ஒஹோ" என்று இதையும் பாராட்டுகிறோம். மேலே நான் கூறிய "மன்னன்" படமும் "அர்ஜுன்" படமும் இப்போது உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன். இன்னமும் இதனை நம்பாத சில வாசகர்கள் இருக்க கூடும். அவர்களுக்கே இந்த பதிவு. இது மட்டும்மில்லை. வாசு காமிக்ஸ் இதழின் ஓவியர் துளசி அவர்களின் சித்திர தரம் எப்படி பட்டது என்றால், மும்பையில் இருந்து வெளிவந்த அமர் சித்திரக் கதை என்ற கதை வரிசையில் வெளி வந்த படங்கள் கூட இந்த கதையை அடிப்படையாக கொண்டு வந்தவையே ஆகும்.

என்னடா இவன்? முதலில் ஜானி நீரோ கதையை காப்பி என்றான், பிறகு அறிஞர் அண்ணாவின் கதைகளையும் கூறினான், இப்போது அமர் சித்திர கதைகளையும் கூறுகின்றானே என்று நீங்கள் வியக்கலாம். தொடந்து படியுங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.

சில வாசகர்கள் மட்டும் என்னடா இந்த அட்டைப் படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையே? என்று வினவலாம். ஆழ்ந்து யோசித்தால் இந்த ஒரு யுத்தியையும் நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்களில் காப்பி அடித்து இருப்பார்கள். உதாரணத்திற்கு முத்து காமிக்ஸ் இதழ் எண் 305'ல் வெளிவந்த "கதை சொல்லும் கொலைகள்" இதழின் அட்டையை பாருங்கள். கதைக்கும் அட்டைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும், இந்த மாயாவியும் மந்திரவாதியும் அட்டையை போல.

இப்போது கதைக்கு போகலாம்: முதல் பக்கத்தை பாருங்கள். இதில் தான் கதையின் இரண்டு Vasu Comics MM Page 1வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாசிரியர் அவர்கள் இருவரையும் எப்படி புலி மற்றும் நரியின் கூட்டணி என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதில் குண்டப்பா என்பவர் தான் மந்திரவாதி ஆவார். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்'களில் வரும் கதைகளின் பெயரும் கதையும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த கதை அப்படி பட்டது இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது மந்திரவாதி வந்து விட்டார், பின்னாலேயே மாயாவியும் வருவார்.அதனால், கதையும் தலைப்பும் தொடர்பு உடையது என்பதை கதையின் முதல் பக்கத்திலேயே தெரிவித்தது விட்டோம். விட்டது ஒரு தொல்லை. இந்த கதையின் ஆசிரியர் திரு துளசி அவர்களை சற்று கூர்ந்து கவனித்து உங்களுடைய நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். ஏன் என்றால் இவர் அகில உலக புகழ் பெற்ற ஒரு நபர் ஆவார். அமெரிக்காவில் உள்ள ட்வின் டவர்ஸ் தாக்குதலுக்கு ஆளானபோது BBC, CNN என பல உலக தொலைக்காட்சிகள் இவரைத்தான் தொடர்பு கொண்டன. எனேன்றால் இவர் தான் இந்தியாவின் Nostradamus என்று அழைக்கபடுபவர்.

 

Vasu Comics MM Page 2 & 3 கதையில் வரும் முக்கிய பாத்திரம் இந்த மன்னார்சாமி ஆகும். எலுமிச்சம் பழத் தோட்ட்டத்தை விற்று சினிமா கதாசிரியர் ஆகும் ஆசையில் இருக்கும் இவருக்கு பொன் சிலை போன்ற அழகான இரண்டு பெண்கள்: முறையே சுமதி மற்றும் கலா ஆகும். இந்த கலாவை பலரும் ரசித்து "கலா-ரசிகர்கள்' என்றும் கூறிக் கொண்டனர். இந்த மன்னர்சமியை சந்திக்கும் இரண்டு வில்லன்களும் அவரிடம் தாங்கள் சினிமா தயாரிப்பாளர்கள் என்று கூறி அவரின் பணத்தையும், தோட்டத்தையும் காணாமல் போகச் செய்தனர்.

இந்த படத்தில் மன்னார்சாமி எப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்பதை கவனியுங்கள். இது தான் ஜப்பானிய "இகிடோ - ஹட்சுமி" என்ற மனக் கட்டுப்பாட்டு கலையின் அடிப்படை ஆகும். இந்த "இகிடோ - ஹட்சுமி" பற்றி வேறு விபரங்கள் வேண்டும் என்றால் நமது காமிக்ஸ் டாக்டரை கேளுங்கள். தமிழ்வாணன் அவர்கள் எழுதிய "டோக்கியோ ரோஜா" என்ற கதையிலும் கூட இந்த "இகிடோ - ஹட்சுமி" கலையை சங்கர்லால் பின்பற்றுவதை வாசகர்கள் நினைவு கூறலாம்.

பின்னர் மன்னார்சாமி இரண்டு வில்லன்களிடமும் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிறார். தென் தமிழகத்தின் மிகப் பெரிய எலுமிச்சை தோட்ட அதிபர் இப்படி கடன் வாங்குவது பலருக்கு அதிர்ச்சியை தந்தாலும், அப்போதே இந்த Economic slow down பற்றி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. இது போன்ற பல சம்பவங்களை நமக்கு முன்னரே தெரிவித்ததால் தான் இந்த கதாசிரியர் துளசியை தமிழகத்தின் Nostradamus என்று பல அறிவியல் அறிஞர்கள் கூறுவர். இதே கதாசிரியர்தான் தமிழகத்தில் மின்சார தட்டுப் பாடு வரும் என்பதை தன்னுடைய "நாட்டுப்புற மாயாவி" என்ற கதையில் மிக அழகாக கூறி இருப்பார்.

Vasu Comics MM Page 8 & 9ஓர் இரவு: கடன் தொல்லையால் வீட்டையே இழககும் நிலை வரும்போது இளைய மகள் சுமதி தான் வேலை பார்க்கும் வீட்டு அம்மாவிடம் தன்னுடைய பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை வாங்கி வருகிறாள். அந்த ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களே இந்த கதைக்கு அடித்தளமாக அமைகின்றன. வாசக அன்பர்களே, இப்போது புரிகின்றதா அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு கதைக்கும் இந்த காமிக்ஸ் கதைக்கும் உள்ள தொடர்பு?

ஆனால், அப்போது தான் விதி அவள் வாழ்க்கையில் விளையாடுகிறது. விதி வலியது என்பது நம்மில் பலருக்கும் தெரியும்: ஆனால் விதி கொடியது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பெருமழைக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கும் சுமதியை ஒரு நாகம் தீண்டிவிடுகிறது. அவள் அந்த நொடியிலேயே உயிர் துறக்கிறாள்.

அவளை பின் தொடந்து வந்த ஒரு மர்ம உருவம் அவளிடம் இருந்த ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து கொண்டு சென்று விடுகிறது. இப்படியாக விதியின் சதியால் சுமதி பணத்தை கொடுத்து கடனை அடைக்க முடியாமல் இறந்ததால் மன்னர் சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளுகிறார்

Vasu Comics MM Page 14 & 15 Vasu Comics MM Page 38 & 39 அதனால் மிகுந்த வருத்தமுற்ற கலா தன்னுடைய பெயரை துர்கா என்று மாற்றி கொண்டு தன்னுடைய குடும்பத்தை சீர்குலைத்தவர்களை பழி வாங்க சபதம் பூண்டாள். அதனால் அவள் மருதன் வீட்டிலேயே வேலைக்கு செல்கிறாள். அப்போது மாயாவி அங்கு வருகிறார். (அப்பாட, ஒரு வழியாக கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் உண்டு என்பதை நாம் நிரூபித்து விட்டோம் - அதுவும் பதினான்காம் பக்கத்திலேயே).

இவர் யார்? இவருக்கு ஏன் மாயாவி என்று பெயர் வந்தது? இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தாலும் அதை கட்டுப்படுத்தி கொண்டு படியுங்கள் (கதையை முழுவதுமா படித்த எனக்கே புரியல. பதினாலு பக்கம் படிச்ச இவருக்கு புரியணுமாம் = ஆசை, தோசை அப்பளம் வடை). மாயாவி துர்காவாகிய கலாவுக்கு உதவி செய்வதாக கூறி விடை பெறுகிறார்.

வேலைக்காரி: பிறகு இரண்டு கயவர்களில் ஒருவராகிய குண்டப்பா அங்கு வருகிறார். அவர் ஒரு பெண் பித்தன் என்பது தெரிந்தாலும் கடமையே கண்ணாக கொண்ட துர்கா தன்னுடைய சேலை விலகி இருப்பதை உணராமல் இருக்கிறாள். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டே "வேலைக்காரி" உருவானதாக பலர் கூறுவர்.

Vasu Comics MM Page 44 & 45 Vasu Comics MM Page 46 & 47 பின்னர் தனனுடைய குடும்பத்தை நடுத்த் தெருவிற்கு கொண்டு வந்த இரண்டு கயவர்களில் ஒருவனை (குண்டப்பா) துர்கா கொன்று விடுகிறாள். மற்றும் ஒரு காமக் கொடூரன் ஆகிய வட இந்திய சேட் ஒருவனையும் துர்கா கொள்கிறாள். கடைசியாக மருதனை கொல்ல முயலும்போது மருதன் உன்மயை தெரிந்து கொள்ளுகிறார். மருதன் தனனுடைய துப்பாக்கியால் துர்காவை கொல்ல முயலும்போது மருதனின் முதல் தாரத்தின் மகனாகிய சேகர் அங்கு வந்து தோட்டாவை தான் வாங்கி கொள்கிறார். அதனால் கோபமுற்ற மருதன் சேகரை தூணில் கட்டி வைக்கிறார்.

Vasu Comics MM Page 48 & 49 Vasu Comics MM Page 50 & 51 அப்போது அருகில் இருந்த அறையில் இருந்த டி.வீ.யில் ஒரு படம் வந்தது. இந்த காட்சியை காணுங்கள். இதில் இருந்து தான் அமர் சித்திர கதைகள் உருவாகியது என்பதற்கு இரு வேறு கருத்து இருக்க முடியுமா?

 

 

 

Vasu Comics MM Page 52 & 53 Vasu Comics MM Page 60 & 61

Vasu Comics MM Page 62 & 63

 

 

 

 

 

 

 

உலகப் புகழ் பெற்ற பஞ்ச தந்திர கதைகள் உருவான அடிப்படை இந்த காக்கா-குஞ்சு கதை தான் என்று நான் சொல்ல மாட்டேன். ஏன் என்றால் அதன் அடிப்படை என்ன என்பது எனக்கு தெரியும். அப்போது சேட்'இன் தங்கம் இருக்கும் பெட்டியுடன் ஓட நினைக்கும் மருதனை மாயாவி வழி மறிக்கிறார். இந்த சண்டை காட்சியை பாருங்கள். பெய்ருட்டில் ஜானி என்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் இருந்தும் இரண்டு பக்கங்களை இங்கு ஸ்கான் செய்து உங்களின் பார்வைக்கு அளித்து உள்ளேன். ஒரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம் என்பது போல ஒரு காமிக்ஸ் காப்பி அடிக்கும் என்பதிற்கு இரண்டு பக்கங்களே போதும்.

 Muthu Comics Beirutil Jani Page 20 & 21 Muthu Comics Beirutil Jani Page 18 & 19

இந்த சண்டை காட்சிகளை கண்டு வியந்த இயக்குனர் ஷங்கர் இது போன்ற ஓரு சண்டை கட்சியை தன்னுடைய இயந்திரன் படத்தில் வைத்து இருப்பதாக தகவல். நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களிடம் இதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும்.

 

 

 Vasu Comics MM Page 64

ஓரு வழியாக தீமை அழிந்து நன்மை வாழ்வதாக இந்த கதை முடிகிறது. ஆனால் இந்த கதையுடன் பல தொடர்புகள் இன்றைய சமூக வாழ்க்கைக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக பதிய கூடாது?

 

காமிக்ஸ் டாக்டர் தன்னுடைய வலைப்பூவில் ஏதோ பெரிதாக முத்து காமிக்ஸ் மாயவியிடம் இருந்து கடிதம் இருப்பதை கூறினார். ஆனால் அதன் அடிப்படை என்ன என்பதை இங்கு நீங்கள் பாருங்கள்.

 

 

Intro

next issue coming soon

நம்முடைய கிங் விஸ்வா, ரபிக் ராஜ போன்றவர்கள் தங்களுடைய வலைப் பூவில் சும்மா அடுத்த பதிவு இது என்று போட்டு நம்ம உயிரை எடுக்கிறார்கள். அதனால் தான் நானும் இப்படி ஓரு உத்தியை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த ஒன்பது கதையில் எந்த காவியத்தை அடுத்த பதிவாக போட வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு வோட்டு அளித்து தெரிவியுங்களேன்? ஆனால் டாக்டரின் ஆவி என்ற கதை பலரின் கவனத்தை கவரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Doctarin Aaavi

irumbuk kai Edison Aavigaludan Maayavi

இந்த டார்ஜான், டார்ஜான் என்று பலர் கூறுவார்களே, அந்த டார்ஜானின் பிறப்பிடம் இந்த கருமலை தீவு என்ற கதையே ஆகும். மேலும் முத்து விசிறி அவர்கள் பதிவிட்ட கொலைகார கலைஞன் என்ற கதையின் மூலம் இந்த கோமாளியின் கொலைகள் தான் என்பதை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

MalaiVaasalil Maayavi Karumalai Theevu Komaaliyin Kolaigal

உறைபனி மர்மம் என்ற கதையில் நமது இரும்புக்கை மாயாவி தோன்றுவார். அந்த கதையின் மூலம் இந்த பனித்தீவில் மாயாவி என்ற கதை ஆகும். இதை பற்றி நமது முத்து விசிறி தனது அடுத்த பதிவில் விரிவாக எழுதலாமே?

மெக்சிகோ மாயாவி என்ற கதை ஆங்கிலத்தில் வந்து விட்டது. நம்முடைய முத்து காமிக்ஸ் தான் அதனை தமிழில் வெளி இட வில்லை. அதைப் போல பழைய முத்து காமிக்ஸ் வாசகர்கள் முகமூடி வீரர் வேதாளன் தோன்றும் "முத்திரை மோதிரம்" என்ற கதையே மோதிர விரல் என்று கீழே உள்ள கதை என்பதை உணரலாம்.

pani theevil Maayavi mexico Maayavi Modhira Viral

உங்களின் விமர்சனங்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?


நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, December 3, 2008

மொக்கை காமிக்ஸ் ஒரு அறிமுகம் மற்றும் விஷ ஊசி வேங்கப்பா

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகத்திற்கு என்னுடைய முதற்கண் வணக்கங்கள். இது நாள் வரையில் சக காமிக்ஸ் தோழர்களின் வலை பூக்களில் பின்னுட்டம் இட்டு அவர்களை பின் தொடர்ந்து வந்த நான், என்னுடைய வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகளான கிங் விஸ்வா ஜி, டாக்டர் சதீஷ், கவிஞ்சர் தமிழ் குட்டி என்று இவர்களை தொடர்ந்து நானும் ஒரு வலை பூவை தொடங்கி விட்டேன்.



என்னுடைய கடுமையான பணிகளுக்கிடையில் இதனை எப்படி தொடருவேன் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், சக பதிவர்களாகிய கிங் விஸ்வா ஜி, தமிழ் குட்டி, மருத்துவர் அய்யா ஆகியோர் அவர்களின் பணிசுமைகளுக்கிடஎயும் தொடருவதால் எனக்கும் ஒரு வினையூக்கியாக உள்ளனர். எனவே, வாரத்திற்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்த வலை பூவை ஆரம்பித்து உள்ளேன்.இந்த வலை பூவை நான் யாருடைய கதாபாத்திரத்தையும் சீர்குலைக்க ஆரம்பிக்க வில்லை (நண்பர் ஜோஸ் சந்தோஷப் பட்டு குதிக்கலாம்).





இந்த வலை பூவில் ஒவ்வொரு பதிவிலும் தமிழின் தலை சிறந்த காமிக்ஸ்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் காணலாம். முதல் பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் கதை விஷ ஊசி வேங்கப்பா. என்னடா இது? இது எப்படி தலை சிறந்த காமிக்ஸ் ஆகும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.



இந்த வலை பூவை ஏன் ஆரம்பித்தேன் என்பதை உங்களுக்கு உணர்த்த சில பல அறிவியல் பூர்வமான கருத்துகளை உங்கள் முன் எடுத்து வைக்க ஆசைபடுகிறேன்.


நமக்கு சர்க்கரை என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? இனிப்பு தன்மையே ஆகும். அது போலவே உப்பு என்றவுடன் நமக்கு உவர்ப்பு தன்மையே நினைவுக்கு வரும். இவை எல்லாம் எதற்காக இப்படி நமக்கு தோன்றிகிறது என்றால், நமது சிறு வயது முதலே நமக்கு இவ்வாறு தெரிவிக்கபடுகிறது. அதனால் தான்.


இதுவே, சர்க்கரை என்றால் கசக்கும் என்று நமது சிறு வயதிலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு இருந்தால், தேநீரில் கூட நாம் சர்க்கரையை சேர்க்க மாட்டோம். அது போலவே உப்பு என்றால் இனிக்கும் என்றொரு என்னத்தை நமக்கு ஊட்டி இருந்தால், நாம் தேநீரில் உப்பையும், சமையலில் சர்க்கரையையும் சேர்த்து கொண்டு சுவைப்போம். என்னடா இவன்? சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறானே என நீங்கள் நினைத்தால் தவறாமல் அடுத்த பத்தியையும் படியுங்கள்.



ருசிய நாட்டு விஞ்சானியாகிய இவான் பாவ்லோவ் (1849 - 1936) நோபல் பரிசை வென்ற ஒரு மனோதத்துவ நிபுணர் ஆவார். உளவியல் துறையில் இவரின் பணி சிறப்பான இடத்தை பிடிக்கும். ஆர்கனைசேஷனால் பிஹேவியர் என்ற ஒரு நுண்ணறிவியல் பிரிவில் பாவ்லோவ் செய்த ஒரு சோதனையை இங்கே அவசியம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.



இவான் பாவ்லோவ் (Ivan Pavlov) செய்த அந்த சோதனைக்கு பெயர் கிளாசிகல் கண்டிஷனிங் ஆகும். இந்த சோதனையின் அடிப்படை வாதமே ஒரு உயிரினத்தின் பழக்க வழக்கங்களை தீவிர பயிற்சியின் மூலம் மற்ற முடியும் என்பது ஆகும். இந்த பரிசோதனைக்காக அவர் தேர்ந்து எடுத்த உயிரினம் மனிதனின் உற்ற தோழன் = நாய். (விஸ்வா ஜி கை தட்டுவதை நிறுத்துங்கள். இது உண்மையில் நடைபெற்ற ஒரு பரிசோதனை).


முதலில், ஒரு நாயை அவர் சோதனை கூடத்திற்கு கொண்டு சென்றார். அதற்க்கு உணவிடும் போது ஒரு மணியை ஆட்டுவித்தார். ஒவ்வொரு முறையும் உணவிடப்படும் போதெல்லாம் மணியும் ஒலிக்கப் பட்டது. நாளாக நாளாக, உணவு நாயின் முன்னர் வைக்கப் படாமல் இருந்தாலும், மணி ஓசையை கேட்டவுடன் நாய் உணவு உன்ன தயாராகி நின்றது. அதனுடைய மூலையில் மணி ஓசையும் உணவும் ஒன்றாக கலந்து விட்டது. The Dog was salaivating even when the food was not there.


எதற்காக நான் இந்த சோதனையை இங்கே கூறினேன் என்றால், நாமும் ஒரு வகையில் அந்த நாயை போலவே உள்ளோம். என்ன, நமக்கு சிறு வயது முதலே எல்லா விஷயங்களிலும் இவ்விதமான போதனை செய்ய படுகிறது. காலையில் உண்ண வேண்டும் (பசி எடுத்தாலும் எடுக்கா விட்டாலும்), இரவு தூங்க வேண்டும் (தொக்கம் வராவிட்டாலும் கூட) என்று பலவிதமான கருத்துக்கள் நமது மூலையில் பதிவிக்கப் படுகிறது. ஏன் இரவில் தூங்க வேண்டும்? ஏன் பகலில் தூங்க கூடாது? ஆதி மனிதன் இரவில் பயம் காரணமாக குகையை விட்டு வெளியில் வராமல் இருக்க எண்ணினான். சந்ததி சந்ததியாக அதனை நாம் பின் தொடர்ந்து வருகிறோம். செவ்விந்தியர்கள் உணவு உண்ண என்று நேரம் ஒதுக்கியது கிடையாது. பசி எடுக்கும் போதே அவர்கள் உண்பார்கள். ஆனால், நாமோ சூழ்நிலை கைதியாக உள்ளோம். நமக்கு எது நல்லது கேட்டது என்பதை கூட நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. அந்த வரிசையில் மிக முக்கியமானது காமிக்ஸ் படிக்கும் பழக்கம் ஆகும்.


அதாவது, நாம் எல்லாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது தான் எதையாவது படிக்க ஆரம்பிக்கிறோம். நாமுடைய வீட்டில் உள்ளோர் எதை படிக்க அனுமதிக்கிறார்களோ அதுவே நம்முடைய படிக்கும் வழக்கத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த காலத்தில் இருந்தோர் ஒன்றும் தெரியாமல் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் என்று சிலவற்றை கொடுத்து படிக்க சொன்னதால் நாமும் அவற்றை படித்து இவை தான் சிறந்தவை என்ற தவறான கருத்தோடு வளர்ந்து விட்டோம். நமக்கு பிடிக்கும் என்றே அவர்கள் இந்த காமிச்சி எல்லாம் வாங்கி கொடுத்தாலும், நமக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்பதை நிர்ணயம் செய்ய இவர்கள் யார்? நாமல்லவோ அதை முடிவெடுக்க வேண்டும்?


உலகப் புகழ் பெற வேண்டிய சில அரிய சித்திரக் கதை பொக்கிஷங்கள் அந்த அறியாமை கடலில் மூழ்கி விட்டது. அவற்றை எல்லாம் தமிழ் உலகிற்கு மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற மகோன்னத எண்ணத்துடன் ஆரம்பிக்கப் பட்டதே இந்த வலைபூ. உடனே டாக்டர் சதீஷ், முத்து விசிறி போன்ற சிலர் சண்டைக்கு வரலாம். ஆனால், முத்து காமிக்ஸ்'ன் தலை சிறந்த மூன்று கதாபதிரங்களுமே காபியடிக்கப்பட்டவை ஆகும். அவற்றின் முகமூடியை ஒவ்வன்ராக இங்கே கிழிக்க போகிறேன். அதற்க்கு உங்களின் ஆதரவு எனக்கு தேவை.



முதலில் இரும்புக்கை மாயாவி. என்ன சார் இது கதையா இருக்கு? என்று பலர் சொல்லுவதை உண்மையாக்கி விட்டது இந்த கதை. மின்சாரம் பாய்ந்தால் அவர் மாயமாக விடுவாராம். அப்போ அவரின் உடை எல்லாம் என்ன ஆகும்? அவருக்கு தான் ஆய்வுக்கூடத்தில் விபத்து ஏற்பட்டது. உடைகளுக்கு கூடவா? சரி, சரி. அந்த கதை நமக்கு வேணாம். இந்த கதாபாத்திரதின் மூலம் தமிழில் வெளிவந்த எழில் காமிக்ஸ் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?



ஆம், தோழர்களே. உண்மை சுடும் என்பது இப்போது நெடுநாளைய முத்து காமிக்ஸ் வாசகர்களுக்கு புரிந்து இருக்கும். தமிழ் நாட்டில் சென்னை மாநகரத்தில், மயிலாபூரில் இருந்து வெளிவந்த எழில் காமிக்ஸ் என்னும் சித்திரக்கதை இதழில் கதாநாயகனாக தோன்றியவர் நெருப்பு விரல் சி.ஐ.டி 333. இவரின் சிறப்பு அம்சமே இவரது நெருப்பு விரல் ஆகும். அந்த ஆட்காட்டி விரலை அவர் தரயில் தேய்த்தால் உடனே அந்த விரலில் இருந்து நெருப்பு வரும். அதனால் தன் அந்த பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. இவரை காப்பியடித்தே இரும்புக் கை மாயாவி என்ற பாத்திரம் முத்து காமிக்ஸில் வெளிவந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?



எழில் காமிக்ஸ் எண்பதுகளில் வெளிவந்த ஒரு சிறப்பான தமிழ் காமிக்ஸ் ஆகும். பெரிய அளவில் வெளிவந்தது, முழு வண்ணத்தில் வெளியானதும் இந்த இதழ்ன் சிறப்பு அம்சங்கள். கதையமைப்பு இந்தய மற்றும் தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றியமைந்தது இன்னொரு சிறப்பம்சமாகும். இந்த எழில் காமிக்ஸ்'ன் முதல் இதழ் விஷ ஊசி வேங்கப்பா ஆகும். இந்த இதழை வாங்க காமிக்ஸ் வேட்டையர்கள் பெரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். சென்னையில் இருக்கும் தமிழ் கடவுள் பெயர் கொண்ட ஒரு வேட்டயர், சேலத்தில் இருக்கும் இன்னொரு வேட்டயரிடம் இருந்து இந்த இதழை பண்ட மாற்று முறையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றார். அப்போது அவர் இந்த புத்தகத்திற்கு ஈடாக கொடுத்த புத்தகங்களை சற்று பார்த்தால் இந்த புத்தகத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியும். (லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல், திகில் கோடை மலர், முத்து காமிக்ஸ் - வைரஸ் எக்ஸ், மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல், லயன் - தலை வாங்கி குரங்கு). இப்போது இந்த முதல் இதழின் விமரிசனத்திற்கு செல்வோமா?






இந்திய புலனாய்வு துரையின் தலை சிறந்த துப்பறியும் நிபுணரே நெருப்பு விரல் சி.ஐ.டி. அவர் சந்தித்த வழக்குகளில் இது வரையில் அவர் தோல்வியையே சந்தித்து கிடயாது. அப்படி ஒரு முறை முக்கியமான ஒரு கடத்தல் கும்பலை பிடித்த பின், ஓய்வுக்காக அவர் வட எல்லை புத்தியில் இருக்கும்போது தன் கதை ஆரம்பம் ஆகிறது.



தமிழக கதாசிரியர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தில் எப்போதுமே முன்னோடியாக விளங்குபவர்கள் என்பதிற்கு எடுத்துகாட்டாக, இந்த காட்சியை பாருங்கள்.


அவரது டிஜிட்டல் வாட்சில் உள்ள மேல்பகுதி ஒரு போன் ரீசீவர் ஆகும். அதன் மூலம் அவர் உளவுத்துறை தலைவரிடம் எங்கும் எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இப்போது உள்ள சிக்னல் பிரச்சினை, டொவர் ப்ராப்ளம், ரீசார்ஜ் போன்ற எந்த தொந்தரவும் அவருக்கில்லை. அவருடைய தலைவர் அவரை ஒரு முக்கிய பணிக்காக விசாகபட்டினத்தில் உள்ள ஏரோ ட்ரமிர்க்கு வர சொல்லுகிறார்.கிளம்பி விட்டார் சி.ஐ.டி. இனி எதிரிகள் பாடு திண்டாட்டம் தான்.





அவருக்கு ஒப்படைக்கப்படும் பணி கொடிய கொள்ளைக்காரன் வேங்கப்பாவை பிடிப்பதே ஆகும். ரயிலில் கொள்ளை அடிப்பதில் கை தேர்ந்தவன் வேங்கப்பா என்பதால், அவர் ஒரு ரயிலில் ஏறி பயணம் செய்கிறார். அப்போது சக பயணியாக வரும் விமலா என்ற ஒரு அபலை பெண்ணை காப்பாற்றுகிறார்.

அனல் பறக்கும் அந்த சண்டை காட்சிகளை இங்கே பாருங்கள். இந்த சண்டையிலும் அவருக்கு உதவியாக இருப்பது அவரின் அந்த நெருப்பு விரலே ஆகும்.


இந்த கதாபாத்திரம் அமரர் எம். ஜி, ஆர்'ஐ மனதில் கொண்டு படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது என்னுடைய என்ணமாகும்.

கராத்தேவில் கை தேர்ந்தவர் நமது சி.ஐ.டி என்பதை நான்காவது பேணலில் (கட்டத்தில்) அவர் நிற்கும் போஸில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். மாமா, மச்சான் என்று சமகால் சொற்தொடர்கள் படிப்பவர்களுக்கு நம்மை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.










அபலை பெண்ணாகிய விமலாவை தன்னுடன் அழைத்து கொண்டு வருகிறார் சி.ஐ.டி அவளை ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைத்து விட்டு பின்னர் அலுவலக பணி நிமித்தமாக வெளியே செல்கிறார்.

அப்போது ஏர்போர்ட்டில் அவரை ஒரு பிச்சை காரன் சந்திக்கிறான். அங்கே எப்படி பிச்சைக்காரன் வர முடியும் என்று சில புத்திசாலிகள் வினவலாம்.

இந்தியாவின் பொருளாதார நிலையை விளக்க ஆசிரியர் மேற்கொண்ட ஒரு யுத்தி என்பது காமிக்ஸ் ஆர்வலர்களுக்கே தெரிந்த ரகசியமாகும்.

அந்த பிச்சை காரன் கொடுத்த சீட்டில் மிக முக்கியமான ஒரு ரகசியம் அவருடைய தலைமையகத்தில் இருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை படித்து வியப்படைந்த சி.ஐ.டி, அருகிலுள்ள பேப்பர் கடையில் உள்ள கூட்டத்தை கண்டு வியக்கிறார்.

அந்த பேப்பரில் பிரபல கொள்ளைக்காரன் வேங்கப்பா நாளை சரணடைய போவதாக ஒரு செய்தி வந்து இருந்தது.சி.ஐ.டி சிந்திக்கும் அழகை பாருங்கள்.






மறுநாள் காலை, அனைத்து சாலைகளும் ரோமுக்கு செல்வதை போல, அனைத்து வாகனங்களும் காந்தி திடலை நோக்கியே நகர்ந்தன. அங்கே தான் பிரபல கொள்ளைக்காரன் விஷ ஊசி வேங்கப்பா காவல் துறையிடம் சரணடைய போகிறான். மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த இடத்தில் ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்று என்னும் சி.ஐ.டி, அந்த இடத்திற்கு மாறுவேடத்தில் செல்கிறார்.

தமிழ் நாட்டில் அராபிய ஷேய்க் வேடத்தில் இருக்கும் அவரை யாரும் சந்தேகத்துடன் பார்க்கவும் இல்லை. அவரை கண்டு பிடிக்கவும் இல்லை.

ஆனால் இது எவ்வளோ பரவாயில்லை. சில படங்களில் கதாநாயகன் ஒரே ஒரு மருவை மட்டும் வைத்து கொண்டு, கண்ணாடி அணிது சென்றால் வில்லன் அவரை அடையாளம் கண்டுபிடிக்க தடுமாறும்போது, இது எவ்வளவோ பரவாயில்லை தான்.

ஆந்திராவை சேர்ந்ததை போல உள்ள இவர்தான் தமிழக முதன்மந்திரியாம். இவரிடம் தான் வேங்கப்பா சரணடைய போகிறான்.இந்தியா ஒரு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை உணர்த்தவே இந்த கட்டம்.






ஆனால் அந்த சரணடையும் திட்டம் ஒரு சதிவலை ஆகும். உண்மையில் வேங்கப்பாவின் கும்பல் நகரில் உள்ள ஒரு வங்கியை கொள்ளை அடிக்கவே இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கினர். அந்த கொள்ளை கும்பலை பின்தொடரும் சி.ஐ.டி.யை ஒரு பொடியை தூவி பிடித்து விடுகின்றனர் சதிகாரர்கள். பின்னர் அவரை மரண உருளை மூலம் கொல்ல திட்டமிடுகின்றனர்.

நிற்க.

இந்த மரண உருளை முறையை இத்தாலியில் உள்ள செர்ஜயோ போன்னேலி என்பவர் காப்பியடித்து, டிராகன் நகரம் என்ற டெக்ஸ் வில்லர் கதையில் உபயோகப்படுத்துவார். (தீவிர லயன் காமிக்ஸ் வாசகர்களாகிய மருத்துவர் சதீஷ், கிங் விஸ்வா ஜி, புதுவை கலீல்,காமிகாலஜி ரபிஃ ராஜா போன்றவர்கள் கவனிக்க).

அந்த மரண தருவாயிலும் தன்னுடைய சமயோசித அறிவு கூர்மையினால் தப்பிக்கும் சி.ஐ.டி, நெருப்பு விரலால் விளையாடிக்கொண்டே அங்கிருந்து தப்பித்து செல்கிறார். இனி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்தான்.




பின்னர் பல உண்மைகளை போலீசிடம் தெரிவிக்கிறார் சி.ஐ.டி. விமலா தான் உண்மையான வேங்கப்பா ஆவாள். பிச்சைக்காரன் வேடத்தில் இருந்த போலிஸ் அதிகாரி கொடுத்த ரிக்கார்டில் வேங்கப்பாவின் கையில் என்று பச்சை குத்தப் பட்டு இருப்பதை கொண்டே விமலாதான் வேங்கப்பா என்பதையும் உணருகிறார் சி.ஐ.டி.

ஆகையால் அந்த ஏர்போர்ட்டில் வந்த கதா பாத்திரத்தின் முக்கியத்துவத்தை இப்போது உணரலாம். ஏனெனில், அந்த துண்டு சீட்டில் தான் கதையின் போக்கையே மற்ற கூடிய ஒரு ரகசியம் சி.ஐ.டி.க்கு தெரிய வந்தது.

ஆனால், விமலா ஒரு மாடர்ன் தின ராபின் ஹுட் என்பதையும் போலிஸ் அதிகாரியிடம் கூறுகிறார். பல இடங்களில் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான பிசைக்கரர்களை வாழவைத்து கொண்டு இருக்கும் காவல் தெய்வம் அவள்.

பிசைக்கரர்களை மட்டுமில்லாமல், தொழு நோயாளிகளையும் மற்ற சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் காப்பதே அவளது என்ணமாகும். கடமையில் இருந்து மனம் தளராத சி.ஐ.டி, ஓய்வை நாடி தன்னுடைய காரில் விரைந்து செல்வதோடு இந்த காப்பியம் முடிவடைகிறது.


அடுத்த இதழிலும் நெருப்பு விரல் சி.ஐ.டி.யின் சாகசம் என்பது மனதுக்கு மகிழ்வுட்டும் செய்தியல்லவா?


ஆம், பனியில் புதைந்த ஒரு ரகசியத்தை தேடி சி.ஐ.டி புறப்படுகிறார்.














தற்போது உள்ள தொ(ல்)லை காட்சிகளில் மெகா சீரியல்கள் வருவது போல எண்பதுகளில் குறுந்தோடர்களும், நெடுன்தொடர்களும் வலம் வந்த தருணம். அதனால், இந்த காமிக்ஸ் இதழிலும் ஒரு தொடர் சித்திரக்கதை இடம் பெற்றது. ஜிக் ஜாக் என்ற கதாநாயகன் தோன்றும் கொலை பள்ளி கூடம் (டாக்டர் சதீஷ் கவனிக்கவும்) என்ற கதையின் முதல் பகுதி இதோ.

ப்ரொபெஸ்ஸர் ஆன்தர் என்ற ஒரு கொடிய வின்ஜானியின் ஆய்வுக்கொடத்தில் நடுநிசி சாமத்தில் ஆரம்பிக்கிறது நமது கதை. விஞ்சானியின் உதவியாளர் நார்மன் ஒரு புதிய குற்ற இலக்கியத்தை (பிஸ்டல் + தோட்டா = கொலை) உருவாக்கி கொண்டு இருக்கிறார். என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு என்று பலர் வியக்கலாம். இதனை அடிப்படையாக கொண்டே ஐன்ஸ்டீன் E=MC2 என்ற பார்முலாவை கண்டுபிடித்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

பயங்கரமான ஒரு உருவம் திரைமறைவில் இருந்து தோன்றுகிறது. இந்த உருவத்தை காமிக்ஸ் ஆர்வலர்கள் உற்று நோக்க வேண்டும். ஏனெனில் லயன் காமிக்ஸில் வெளிவந்த மரணத்தின் நிறம் பச்சை என்ற கதையில் இந்த கதாபாத்திரத்தை அப்படியே காப்பி அடித்து இருப்பார்கள். என்னே தமிழ் காமிக்ஸ் உலகம் இது (விஸ்வா கோபிக்க வேண்டாம்). நான் கூறியாது பொதுவாக, அவருடைய வலைப்பூவை குறித்து அல்ல. காமிக்ஸ் ஆர்வலர்களுக்கிடையே போட்டி இருக்கலாம்; சண்டை கூடாது.

இத்துடன் எனது இந்த முதல் பதிவை இனிதே முடித்து கொள்கிறேன்.

* இந்த பதிவில் இடம் பெற்றதை போலவே பல கதைகளின் மூலம் எது என்பதை தொடர்ந்து பதிவில் துப்பறிந்து கூற வேண்டுமா?

* இந்த பதிவில் இடம் பெற்றதை போலவே விஞ்சான அடிப்படை தத்துவங்களையும் நான் தொடர்ந்து முன் வைக்க வேண்டுமா?

* இந்த பதிவில் இடம் பெற்றதை போலவே பல உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை பற்றிய விமர்சனம் இடம் பெற வேண்டுமா?

உங்களின் விமர்சனங்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails